கரூரில் 2-வது நாளாக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-05-17 16:35 GMT
கரூர்
ரூ.100 கோடி இழப்பு
நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் ஓனர் அசோசியேசன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், கரூர் நூல் வர்த்தகர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் கவனஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கரூர் பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தனர். 
இதில் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150 நூல் வினியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறுதையல் நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் மூலமாக சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி, டையிங், பிரிண்டிங் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான அளவில் ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.
2-வது நாளாக
இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் செங்குந்தபுரம், வையாபுரிநகர், வடிவேல்நகர், ராமகிருஷ்ணபுரம், காமராஜபுரம், எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்