பெங்களூரு போலீஸ் கமிஷனராக பிரதாப் ரெட்டி பதவி ஏற்பு

பெங்களூரு புதிய போலீஸ் கமிஷனராக பிரதாப் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

Update: 2022-05-17 16:09 GMT

பெங்களூரு:


பிரதாப் ரெட்டி பதவி ஏற்பு

  பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக கடந்த 22 மாதங்களாக பணியாற்றி வந்த கமல்பந்த்  நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் புதிய போலீஸ் கமிஷனராக பிரதாப் ரெட்டியை நியமித்து அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று மதியம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த பிரதாப் ரெட்டி, பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் கமல்பந்த் பொறுப்புகளை ஒப்படைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்பின்னர் புதிய போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

  பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். எனக்கு இந்த பதவியை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பெங்களூரு நகருக்கு உலகளவில் அங்கீகாரம் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு பெங்களூரு பெயர் பெற்றது. நகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுப்பேன். நகரில் அமைதியை நிலைநாட்ட போலீஸ்காரர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

விரைவு கோர்ட்டுகளை அமைப்பது...

  பெரிய அளவில் நடக்கும் குற்றங்களை கண்டறிய பெங்களூருவில் 8 மண்டலங்களிலும் குழு அமைக்கப்படும். இந்த குழு குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் சமர்ப்பிப்பது, ஆதாரங்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த குழுவில் மூத்த அதிகாரிகள் பணியாற்றுவார்கள். இதனால் குற்றம் செய்பவர்களுக்கு விரைவாக தண்டனை வாங்கி கொடுக்க முடியும்.
  நகரில் வசிக்கும் பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படும். திராவகம் வீசுதல் உள்பட கடுமையான குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் வகையில் விரைவு கோர்ட்டுகளை அமைப்பது குறித்து அரசிடம் பேசுவேன்.

டோயிங் வாகனங்கள்

  பெங்களூரு நகரில் சமீபகாலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், இதில் ஈடுபவர்களை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதற்காக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நகரில் அனைத்து சாலைளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

  நிறுத்தப்பட்டுள்ள டோயிங் வாகனங்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு கூட்டத்தை நடத்த வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்