விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் ரத்து
பொள்ளாச்சியில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் தபால் அனுப்பவில்லை என்று அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் தபால் அனுப்பவில்லை என்று அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
முறையீட்டுக்குழு கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் காலை நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி கூட்டரங்கில் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு ஒரே ஒரு விவசாயி மட்டும் வந்திருந்தார். வேறு விவசாயிகள் யாரும் வரவில்லை.
இதனால் விவசாயிகளுக்கு போடப்பட்டு இருந்த இருக்கைகள் காலியாக கிடந்தன. இதற்கிடையில் விவசாயிகள் வருவார்கள் என்று நீண்ட நேரமாக காத்திருந்த சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் ஒரு மணி நேர தாமதமாக கூட்டரங்கிற்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்த விவசாயி சின்னசாமி மட்டும் பேசுமாறு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் விவசாயிகளுக்கு அடுத்த கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுத்து, அனைவரும் வந்த பிறகு கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.
தபால் அனுப்பவில்லை
இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், மற்றொரு தேதியில் நடைபெறும் சப்-கலெக்டர் கூறினார். இதை தொடர்ந்து அதிகாரிகள் கலந்துகொண்ட மனுக்கள் மீதான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்திற்கு 5 நாட்களுக்கு முன்பாக தபால் வந்து விடும்.
கூட்டம் ரத்து செய்யப்பட்டால் செல்போன் மூலம் அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் இந்த மாதம் தபாலும் அனுப்பவில்லை. அதிகாரிகளும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் விவசாயிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால், வருவாய் கோட்டம் அளவில் நடைபெறும் கூட்டத்திற்கு மட்டும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையில் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள், கொடுக்கப்படும் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே, அதிகாரிகள் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டம் குறித்து விவசாயிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.