வாகன சோதனையை கண்டித்து இளைஞர்கள் சாலை மறியல்
காரைக்காலில் வாகன சோதனையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் விரட்டியடித்தனர்.;
காரைக்காலில் வாகன சோதனையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
சாலை மறியல்
காரைக்கால் வலத்தெரு பகுதியில் நகர காவல்நிலைய போலீசார், இரவு நேரத்தில் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வழியாக ஆவணங்கள் இன்றி வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
போலீசாரின் இந்த வாகன சோதனையை கண்டித்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் நேற்று இரவு, அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் நகர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் இளைஞர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.