ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து விற்பதாக புகார்
மடத்துக்குளம் பகுதியில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்த விற்பதாக புகார் எழுந்துள்ளது.;
மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்த விற்பதாக புகார் எழுந்துள்ளது.
ரேஷன் அரிசி
மடத்துக்குளம் தாலுகாவில் 60-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கானோர் ரேஷன் பொருள் வாங்குகின்றனர். இதில் பலர் ரேஷன் அரிசியை வாங்கிவந்து சாப்பிடாமல் இருப்பு வைக்கின்றனர். சில நபர்கள் இந்த அரிசியை கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை விலைக்கு வாங்கி ரகசியமான ஒரு இடத்தில் சேகரித்து வைக்கின்றனர்.
பின்பு தங்களுக்கு தெரிந்த அரிசி ஆலையில் கொடுத்து பாலீஸ் செய்கின்றனர். இதற்குப் பின்பு இந்த அரிசி கிலோ ரூ.12 முதல் ரூ.18 வரை விற்பனைக்கு செய்யப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பாலிஷ் செய்து விற்பனை
"அரிசி வாங்க சிரமப்படும் ஏழைமக்களுக்காக அரசால் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. ஆனால், வசதி உள்ளவர்களும் இதை வாங்கி சொற்ப வருவாய்க்கு ஆசைப்பட்டு விதிமுறைக்கு புறம்பாக விற்கின்றனர். இதனால் இந்தத்திட்டத்தின் நோக்கம் வீணாகிறது. ரேஷன் அரிசி கடத்தல், பாலிஷ் செய்து விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோதமான நடவடிக்கைகள் உருவாகிறது. கோழிகளுக்கும், கால்நடைகளுக்கும் தீவனமாக தேவை என கூறி சில வியாபாரிகள் ரேஷன் அரிசியை மக்களிடமிருந்து வாங்குகின்றனர். இதற்குப் பின்பு கணியூர், காரத்தொழுவு சுற்றுப்பகுதியிலுள்ள அரிசி ஆலையில் பாலிஷ் செய்யப்பட்டு வடமாநில தொழிலாளர்களுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. கேரளாவுக்கும் கடத்தப்படுகிறது. இதுகுறித்து அரசு நடவடிக்கை தேவை" என தெரிவித்தனர்.