கடலூரில் பரபரப்பு விழுப்புரம் மாணவி கல்லூரியில் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
கடலூர் கல்லூரி கழிவறையில் விழுப்புரம் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் போலீசில் சிக்கியுள்ளது.
கடலூர்,
விழுப்புரம் மாவட்டம் சின்னபாபுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (வயது 19). இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்காக தனலட்சுமி, கல்லூரி அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தினசரி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்த தனலட்சுமி, கல்லூரியில் மாதிரி தேர்வு எழுதுவதற்காக நேற்று முன்தினம் மாலை தனது தந்தையுடன் விழுப்புரத்தில் இருந்து விடுதிக்கு வந்துள்ளார். பின்னர் தனலட்சுமியை விடுதியில் விட்டு விட்டு அவரது தந்தை வீட்டுக்கு சென்றார்.
தற்கொலை
இதற்கிடையே நேற்று காலை தனலட்சுமி விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றார். பின்னர் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையில் இருந்து சத்தம் கேட்டதால் அச்சமடைந்த அங்கு பணியில் இருந்த துப்புரவு ஊழியர், பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பேராசிரியர்கள் விரைந்து வந்து கழிவறை கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது அங்கு தனலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, மாணவியின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
உருக்கமான கடிதம்
தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பேக்கை சோதனை செய்தனர். அதில் மாணவி உருக்கமாக எழுதியிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. தனது தம்பி, தங்கையை பற்றி எழுதிய அந்த கடிதத்தில், நல்லா படிடா சக்தி. அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கோ, தினமும் நவினுக்கும், நிஷாந்திக்கும் பாடம் சொல்லி கொடு. சண்டை போடாம ஒற்றுமையா இருங்க. சீக்கிரமா வீடு கட்டிடுங்க. என்னுடைய வாட்ச நிஷாந்திக்கு கொடு. யாரையும் நம்பாத. போலியான உலகம் இது.
லவ் யூ டா சக்தி. ஆயாவுக்கும், அரிகோவிந்த அப்பாவுக்கும் அம்மாவ சாப்பாடு தர சொல்லு. அப்பாவுக்கு அதிகமாக செலவு கொடுக்காத, அம்மாவ ஆடு, மாடு எல்லாத்தையும் வித்திட சொல்லு. கஷ்டப்பட்டு இந்த சின்ன வயசுல நல்லா படிடா. எனக்கு நான் பெயில் ஆகிடுவேனோனு பயமா இருக்கு. அதான் போய்டலாம்னு முடிவு பண்ணிட்டேன் என எழுதப்பட்டிருந்தது.
வகுப்பை புறக்கணித்த மாணவிகள்
பின்னர் போலீசார், தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காலையில் கல்லூரி வந்த மாணவிகள், தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்து வகுப்பறைக்குள் செல்லாமல், வளாகத்திலேயே நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் வகுப்பை புறக்கணித்து வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
இதற்கிடையே மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மாணவியின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். அதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விசாரணை
தொடர்ந்து போலீசார், மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி கழிவறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காரிகால் பாரி சங்கரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், மாணவி தனலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்கையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.