பல்வேறு துறை கண்காட்சியில் பரதநாட்டியம்
தென்காசியில் நடைபெற்று வரும் பல்வேறு துறை கண்காட்சியில் பரதநாட்டியம் நடந்தது.
தென்காசி:
தமிழக அரசு சார்பில் 75-வது சுதந்திர தின விழா அமுத பெருவிழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக பல்வேறு துறை சார்பில் பணி விளக்க கண்காட்சி தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கானது ஊரகப் பகுதியில் உள்ள கிராமத்து வீடு போன்று பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் குழுக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது. இந்த அரங்கில் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.10 முதல் ரூ.1000 வரை மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. மேலும் மகளிர் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவில் சேர விரும்புபவர்கள், வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற் பயிற்சி வேண்டுவோர், தொழில் கடன் உதவி வேண்டுவோர் தங்கள் விவரங்களை மகளிர் திட்ட அரங்கு அலுவலரிடம் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த கண்காட்சி வருகிற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. முதல்நாளில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் குறித்த வில்லிசை நிகழ்ச்சி பண்பொழி மாரியம்மாள் குழுவினரின் சார்பில் நடைபெற்றது. மேலும் பாரதியார் பாடல்களுக்கான பரத நாட்டியம் நிகழ்ச்சி புருஷோத்தமன் குழு சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.