ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதிக்கு அத்தியாவசிய பொருட்கள்
பனப்பாக்கம் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதிக்கு அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் வழங்கினார்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் தங்கும் விடுதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சமையலறை, குடிநீர், கழிவறை ஆகியவை சுகாதாரமான முறையில் பராமரிக்க படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். அதன்பின் மாணவிகளிடம் உரையாடிய அவர் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மாணவிகள் நலனுக்காக விடுதிக்கு தேவையான மின்விசிறி, எல்.ஈ.டி பல்புகள், பாய், தலையணை, சாப்பிடும் தட்டு, டம்ளர் மற்றும் தண்ணீர் காய்ச்சி குடிக்கும் மின்சாதனம் உள்ளிட்ட பொருட்களை விடுதி காப்பாளர் தனம்மாளிடம் வழங்கினார்.
விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் எவ்வாறு படிக்கின்றனர் என்பதை விடுதி காப்பாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் மாணவிகளுடன் தரையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி, வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், நெமிலி தாசில்தார் ரவி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.