தாளவாடியில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை
தாளவாடியில் 2 மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் தாளவாடி பகுதியில் பல்வேறு இடங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடியில் 2 மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் தாளவாடி பகுதியில் பல்வேறு இடங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள், தடுப்பணைகள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தாளவாடி, அருள்வாடி, பனக்கள்ளி, சிமிட்டகள்ளி, மாதள்ளி, திகனாரை தொட்டகாஜனூர், சிக்கள்ளி, இக்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இது விடாமல் தொடர்ந்து 2 மணி நேரம் கன மழையாக கொட்டி தீர்த்தது. இந்த மழையால் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மழைநீர் சூழ்ந்தது.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் இந்த கனமழை தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியிலும் கொட்டி தீர்த்தது. இந்த மழையால் தாளவாடி பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட ஓடைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தாளவாடியை அடுத்த சிமிட்டகள்ளியில் இருந்து மாதள்ளி செல்லும் சாலையில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலையில் கும்டாபுரம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியதால் அங்கும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் 3 மணி நேரமும், திகனாரையில் இருந்து கரளவாடி செல்லும் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றதால் 2 மணி நேரமும், சூசைபுரத்தில் இருந்து பீம்ராஜ்நகர் செல்லும் ரோட்டில் உள்ள தரைப்பாலத்தையும் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றதால் 1 மணி நேரமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளம் நிரம்பியது
கனமழை காரணமாக தாளவாடி பகுதியில் தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், வாழை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு உள்ள விவசாய நிலங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. இதன்காரணமாக விவசாய கூலித்ெதாழிலாளர்கள் தங்களுடைய வேைலகளை அப்படியே விட்டு விட்டு செல்ல தொடங்கினர். ஆனால் மழை காரணமாக ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் விவசாய கூலி ெதாழிலாளர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
தாளவாடியை அடுத்த எரகனகள்ளி அருகே பெளிரங்கா என்ற குளம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நிறையாத இந்த குளம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த மழை காரணமாக நிரம்பியது. குளம் நிரம்பியதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தடுப்பணை
தாளவாடி பகுதியில் உள்ள ஓடைகளில் பெருக்கெடுத்த ஓடிய வெள்ள நீர் வீணாக கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு சென்று சேர்ந்தது.
மழைநீரானது கர்நாடக மாநிலம் சிக்கொலா அணையில் கலப்பதை தடுக்க தாளவாடி பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அறச்சலூர், ஊஞ்சலூர்
அறச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. ½ மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஊஞ்சலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலையில் இருந்து திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஊஞ்சலூர், கொளாநல்லி, தாமரைப்பாளையம், வடக்கு புதுப்பாளையம், நடுப்பாளையம், கொளத்துப்பாளையம், காசிபாளையம், ஆகிய படுதிகளில் மலை 5 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் விடாமல் பெய்த மழை பெய்துகொண்டே இருந்தது.
இதேபோல் சிவகிரி, கந்தசாமிபாளையம், வேட்டுவபாளையம், கவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணியளவில் தொடங்கிய மழை 1½ மணி நேரம் நிற்காமல் பெய்தது.