கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-17 07:16 GMT
திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்பை அரவைக்காக வழங்கி வருகின்றனர்.

இந்த ஆலையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது குறித்து ஆலை நிர்வாகத்திடம் பல முறை கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் துளசி நாராயணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கட்டுக் கழிவு தொகை 3 சதவீதம் பணத்தை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கவேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு நடப்பாண்டில் சேர வேண்டிய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஆலைய நிர்வாகம் ஏற்கனவே சங்க பிரதிநிதிகளிடம் ஒத்துக்கொண்டபடி பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய வாகன பாக்கியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களிடம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி வந்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேலாண்மை இயக்குனர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதன் பிறகு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்