சட்டவிரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை: தமிழகம் முழுவதும் கல்குவாரிகளில் ஆய்வு அமைச்சர்-வருவாய்த்துறை முதன்மை செயலாளர் பேட்டி
தமிழகம் முழுவதும் கல்குவாரிகளில் ஆய்வு செய்து, சட்ட விரோதமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கூறினார்கள்
நெல்லை:
தமிழகம் முழுவதும் கல்குவாரிகளில் ஆய்வு செய்து, சட்ட விரோதமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கூறினார்கள்.
கூட்டாக பேட்டி
நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக அரசின் வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், கனிம வளத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நெல்லை கல்குவாரியில் சிக்கிய 3 பேரை மீட்க திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சுரங்கத்துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். பாறைகளுக்குள் சிக்கி உள்ளவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கல்குவாரிக்குள் நின்றிருந்த ஒரு பெரிய பொக்லைன் எந்திரம் பழுது நீக்கப்பட்டு, அந்த எந்திரமும் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
விதி மீறி செயல்பட்ட கல்குவாரி
இந்த கல்குவாரியில் விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் மூடப்படும். விபத்து நடந்துள்ள கல்குவாரி 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த கல்குவாரிக்கு கனிமவள உதவி இயக்குனர் அனுமதியை நிறுத்தி வைத்திருந்தார். அதையும் மீறி இந்த கல்குவாரி செயல்பட்டுள்ளது.
கல்குவாரியில் மீட்பு பணி முடிந்த உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கல்குவாரி உரிமையாளர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கனிமவள சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் ஆய்வு
தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் கனிம வளத்துறை மூலம் ஆய்வு செய்யப்படும். இனிமேல் இதுபோன்ற விபத்து நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாகவும், விதிகளை மீறியும், அனுமதி இன்றியும் செயல்படும் கல்குவாரிகள் உடனே மூடப்படும்.
கல்குவாரிகளுக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் டிரோன் பயன்படுத்தப்படும்.
கேரளாவுக்கு ஜல்லி, எம்.சாண்ட்
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ஜல்லி, எம்.சாண்ட் மணல் கொண்டு செல்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. வெளி மாநிலத்துக்கு கொண்டு செல்வதற்கு கூடுதல் கட்டணம் மட்டும் விதிக்கப்படுகிறது.
கேரளாவுக்கு ஜல்லி, எம்.சாண்ட் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
ரூ.20 கோடி அபராதம்
தமிழகம் முழுவதும் 1,300 குவாரிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் 55 குவாரிகளுக்கு அனுமதி உள்ள நிலையில் 52 குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
குவாரிகளில் பாறைகள் வெட்டி எடுப்பதற்கான ஆழம், அளவு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தின் அடிப்படையில் மாறுபடும்.
நெல்லை மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்ட 6 கல்குவாரிகள் மூடப்பட்டது. மேலும் ரூ.20 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேட்டியின் போது, சபாநாயகர் அப்பாவு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.