சேலம் மத்திய சிறையில் ஒரு மணி நேரம் காத்திருந்த கைதிகளால் பரபரப்பு

சேலம் மத்திய சிறையில் ஒரு மணி நேரம் கைதிகள் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-16 23:54 GMT

சேலம்:

சேலம் மத்திய சிறையில் 850-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில கைதிகளை வழக்குகள் விசாரணை தொடர்பாக போலீசார் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து செல்வார்கள். அவ்வாறு அழைத்து செல்லும் கைதிகள் மாலையில் மீண்டும் சிறையில் அடைப்பது வழக்கம். இந்தநிலையில், சேலம் மத்திய சிறையில் நேற்று மாலை பல்வேறு ஊர்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரே நேரத்தில் அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்களை சிறையில் அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது, தினமும் மாலை 6 மணிக்கு தேசிய கொடியை இறக்கி மரியாதை செலுத்தப்படும். அந்த நேரத்தில் கைதிகள் அழைத்து வரப்பட்டால் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் ஒரு மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன் கைதிகள் அனைவரும் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து கைதிகளின் பெயர், முகவரி, அவர்கள் எடுத்து செல்லும் உடைமைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி, சிகரெட் ஏதேனும் உள்ளே மறைத்து எடுத்து செல்கிறார்களா? என்பது குறித்தும் வரிசையாக போலீசார் சோதனை செய்து அதன்பிறகு சிறைக்குள் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்