பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்-ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பேட்டி

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று சேலத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அழகரசன் தெரிவித்தார்.

Update: 2022-05-16 23:22 GMT

சேலம்:

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று சேலத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அழகரசன் தெரிவித்தார்.

கவன ஈர்ப்பு கூட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் அழகரசன் தலைமை தாங்கினார். செயலாளர் சசிகுமார், சேலம் நூல் வியாபாரிகள் சங்க தலைவர் ராசி சரவணன் மற்றும் நிர்வாகிகள் அசோக், சீனிவாச குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நூல் விலை உயர்வு குறித்தும், அடுத்த கட்டமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து கூட்டமைப்பின் தலைவர் அழகரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நூல் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 49-ம் நம்பர் ரக நூல் ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது ரூ.440 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சு மற்றும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் ஆகும். உள்நாட்டு தேவைக்கு பஞ்சு, நூல் பற்றாக்குறையாக இருக்கும் போது ஏன்? வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.

தடை செய்ய வேண்டும்

பன்னாட்டு நிறுவனம் பஞ்சு மற்றும் நூலை அதிகளவு வாங்கி, அதனை பதுக்கி வைத்துள்ளனர். இதையடுத்து தட்டுப்பாட்டை காரணம் காட்டி விலையை உயர்த்தி வருகின்றனர். இந்த உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

ஆகையால் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் இந்த தொழிலை நம்பி 50 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். ஓராண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஜவுளி உற்பத்தி மூலம் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

போராட்டம் நடத்துவோம்

இடைத்தரகர்களாலும் நூல் விலை அதிகரித்து வருகிறது. மேலும் பஞ்சு மற்றும் நூல் பதுக்கலை அரசு தடுக்க வேண்டும். நூல் விலையை குறைக்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்