நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி சேலத்தில் கடையடைப்பு போராட்டம்-ரூ.70 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி சேலத்தில் 260 நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.70 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
சேலம்:
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி சேலத்தில் 260 நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.70 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நூல் விலை உயர்வு
நூல் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. அனைத்து ரக நூல்களும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கிலோ ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து பஞ்சு விலையும் உயர்ந்து வருவதால் சேலம் மாவட்டத்தில் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நூல் விலை உயர்வால் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு நஷ்டம் அடைய வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த நிலையில் பருத்தி நூலின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகள் அடைப்பு
சேலம் செவ்வாய்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, கடைவீதி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு கடையிலும் கடையடைப்பு தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. ஜவுளி மொத்த வியாபாரிகளும் கடைகளை அடைத்து இருந்தனர். கடையடைப்பால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், தொழிலாளர்களும் வேலையின்றி தவித்தனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர் சரவணன் கூறும் போது, ஜவுளியின் மூலப்பொருளான நூல் விலை உயர்வால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நூல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் சில வாரங்களில் ஜவுளி உற்பத்தியில் முடக்கம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே நூல் விலை உயர்வை தடுப்பது மற்றும் அதை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 800 கடைகள் அடைக்கப்பட்டன. இந்த கடையடைப்பு போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் ரூ.70 கோடிக்கு வர்த்தகம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.