கூடங்குளத்தில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்
கூடங்குளம்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பெருமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் அந்தோணி அலெக்ஸ் ரூபன் (வயது 33). மீனவர். நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நாட்டுப்படகின் கயிறு அவிழ்ந்ததால், அந்த படகானது சுமார் 500 அடி தூரத்துக்கு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.
இதையடுத்து நேற்று காலையில் அந்த படகை மீட்பதற்காக அந்தோணி அலெக்ஸ் ரூபன் உள்ளிட்ட 5 பேர் மற்றொரு படகில் கடலுக்கு சென்றனர். அப்போது ராட்சத அலை எழுந்ததில் திடீரென்று படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அந்ேதாணி அலெக்ஸ் ரூபன் உள்ளிட்ட 5 பேரும் கடலில் தத்தளித்தனர். இதில் அந்தோணி அலெக்ஸ் ரூபன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் நீந்தி கடற்கரைக்கு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று, இறந்த அந்தோணி அலெக்ஸ் ரூபனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.