போச்சம்பள்ளி அருகே ஊரக வேலை அட்டை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
போச்சம்பள்ளி அருகே ஊரக வேலை அட்டை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே ஊரக வேலை அட்டை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலை அட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அருகே உள்ள ஏ.மோட்டூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை அளிப்பு திட்டத்தில் வேலை செய்வதற்கான பணி அட்டை இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவது இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று ஏ.மோட்டூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் போச்சம்பள்ளி அருகே புட்டன்கடை பகுதியில் திரண்டனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் ஊரக வேலை பணி அட்டை, சீரான குடிநீர் வழங்க கோரி திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இ்டத்துக்கு போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ, பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் பணி அட்டை வழங்கவும், சீரான குடிநீர் வினியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.