கிருஷ்ணகிரியில் கனமழை; சாலைகள் வெள்ளக்காடானது
கிருஷ்ணகிரியில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடானது.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடானது.
கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பகலில் வெயில் அடித்து வந்தது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை வழக்கம் போல வெயில் அடித்தது.
இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் விடாமல் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை வெள்ளகாடானது. சேலம்- தேசிய நெடுஞ்சாலையில் பழைய ஸ்டேட் வங்கி அருகில் சாலையில் முட்டு அளவிற்கு தண்ணீர் தேங்கியது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
அந்த தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதில் சில வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்து பழுதானது. மேலும் பல வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளியபடி சென்றதை காணமுடிந்தது. கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலத்தில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியது. பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு உள்ள சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்களில் சென்றவர்கள் அவதியடைந்தனர். இதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் ஏரி போல் காட்சியளித்தது. பழையபேட்டை டவுன் பஸ் நிலையத்தில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடியது.
கிருஷ்ணகிரி பெரியார் நகர் மற்றும் அம்சா உசேன் தெருவில் மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். நகரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் சென்றதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மழை அளவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ராயக்கோட்டையில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதே போல் ஊத்தங்கரை 18.2, பாரூர் 17.6, ஓசூர் 14, போச்சம்பள்ளி 13.2, தேன்கனிக்கோட்டை மற்றும் தளி 13, பெனுகொண்டாபுரம் 12.2, கிருஷ்ணகிரி 8, நெடுங்கல் 5, அஞ்செட்டி 4.8 என மொத்தம் 156.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.