கிருஷ்ணகிரி அணையில் விவசாயியிடம் ஜேப்படி செய்தவர் கைது
கிருஷ்ணகிரி அணையில் விவசாயியிடம் ஜேப்படி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
பர்கூர் தாலுகா ஓரப்பம் அருகே உள்ள செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 53). விவசாயி. இவர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அந்த நேரம் 2 பேர் அருகில் வந்து முனுசாமி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.700-ஐ ஜேப்படி செய்தனர். இதை கவனித்த முனுசாமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.
பிடிபட்ட நபர் கே.ஆர்.பி. அணை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் வெங்கடேசன் (வயது 29) என்பதும், கிருஷ்ணகிரி தாலுகா பெத்ததாளப்பள்ளி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பையப்பன் கொட்டாயை சேர்ந்த அப்பு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.