மசூதி இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட வேண்டும்-பிரதமருக்கு, இந்து அமைப்புகள் கோரிக்கை
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் மசூதி அமைந்திருக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட வேண்டும் என்று பிரதமருக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன
மண்டியா: மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் மசூதி அமைந்திருக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட வேண்டும் என்று பிரதமருக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
திப்பு சுல்தான்
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜாமியா மசூதி உள்ளது. கடந்த 1784-ம் ஆண்டுக்கு முன்பு இந்த இடத்தில் இந்து கோவில் ஒன்று இருந்ததாகவும், அதை திப்பு சுல்தான் இடித்துவிட்டு மசூதியை கட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த மசூதி அமைந்துள்ள பகுதியில் ஆஞ்சநேயசாமி இருந்ததற்கான ஆதாரங்கள், தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், அதனால் அங்கு ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதாவது இங்கு இந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்களாக கோபுரங்கள், கொடிமரம், குளம் உள்ளிட்டவைகள் இருப்பதாகவும், கலசங்கள் இருந்ததாகவும் இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கவனிக்க வேண்டும் என்றும் மண்டியா மாவட்ட கலெக்டர் வழியாக பிரதமர் அலுவலகத்துக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை மனுவும் அனுப்பி உள்ளன.
சட்டப்போராட்டம் நடத்துவோம்
மேலும் அங்கு ஆஞ்சநேயர் கோவில் கட்டுவது தொடர்பாக கோர்ட்டுக்கு செல்லவும் இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. பாபர் மசூதி, வாரணாசியில் உள்ள ஞானவியாபி மசூதி போல் ஜாமியா மசூதி விவகாரமும் கோர்ட்டுக்கு செல்லும் என்று இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. கோர்ட்டு மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தங்களுக்கான நீதியை பெறுவோம் என்றும் அவர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பஜ்ரங்தள் இந்து அமைப்பின் நிர்வாகியான வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் அரசு மூலம் நமக்கு நியாயம் கிடைக்கும். கடந்த 1935-ம் ஆண்டு ஆய்வின்படி ஜாமியா மசூதி இருந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சாட்சி மைசூருவில் உள்ள நூலகத்தில் அரசிதழில் உள்ளது. இதுதொடர்பான சாட்சிகளை சேகரித்து விரைவில் கோர்ட்டில் சட்டப்போராட்டம் நடத்துவோம்’ என்று கூறினார்.