தமிழகத்தில் பஸ் கட்டணம் உயருமா?

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-05-16 22:06 GMT

பெரம்பலூர்:

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பெரம்பலூர் அருகே துங்கபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.48 ஆயிரத்து 500 கோடி நஷ்டம்

தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசின் போக்குவரத்து துறை ரூ.48 ஆயிரத்து 500 கோடி நஷ்டத்தில், கடுமையான நிதி நெருக்கடியில் இயங்கி வருகிறது. மனித சமுதாயத்தின் முன்னேற்றமே நகர்வை நோக்கியதாகத்தான் உள்ளது. அப்படி நகர்வை நோக்கிய பயணத்திற்கு பொது போக்குவரத்து இன்றியமையாததாகிறது.

மத்திய அரசு அன்றாடம் டீசல் விலையை உயர்த்தி வரும் சூழலில், மக்களுக்கு வழங்கப்படும் சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் போக்குவரத்து துறை இயங்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அண்டை மாநிலங்களில் பஸ் பயணச்சீட்டு விலை உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால், நமது தமிழக அரசின் போக்குவரத்து கழக பஸ்கள் அண்டை மாநிலங்களுக்குள் செல்லும்போது அவர்கள் நிர்ணயித்துள்ள பயணச்சீட்டிற்கான தொகையை பெற வேண்டியுள்ள சூழல் நிலவுகிறது.

பஸ் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது

நமது மாநிலத்தில் போக்குவரத்துக்கான கட்டணத்தை உயர்த்த முதல்-அமைச்சர் எந்த அறிவுரையும் வழங்கவில்லை. எனவே, தமிழகத்தில் பஸ் பயண கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயணம் என்ற மகத்தான திட்டத்தின் மூலம் இதுவரை 112 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான செலவு தொகையான ரூ.1,600 கோடி நிதியினை முதல்-அமைச்சர் அரசின் சார்பில் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள மிகவும் பழமையான பஸ்களை மாற்றும் வகையில் 2 ஆயிரம் டீசல் பஸ்களும், 500 மின்சார பஸ்களும் வாங்குவதற்கு ஜெர்மனி நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 7 மாதங்களுக்குள் இந்த புதிய பஸ்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் உயர்வு குறித்து வதந்தி

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசு பஸ்கள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று (நேற்று) செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து என்னிடம் கேள்வி கேட்டபோது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன்.

இரு மாநிலங்களுக்கிடையே பஸ் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும்போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படி தான் பர்மிட் வழங்கப்படும். கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை குழப்பிக்கொண்டு, "தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து பஸ்களுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.

கட்டண உயர்வில்லை

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு, போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் இருந்தாலும் முதல்-அமைச்சர், எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக பெண்கள் நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இவ்வாறு ஏழை, எளிய மக்களை பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கி வரும் சூழலில், "கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்