கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா

கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-16 22:06 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தபோது, கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில், அச்சங்க விவசாயிகளும் மற்றும் கொட்டரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இலவச வீடு மற்றும் வீட்டுமனை பட்டா, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சிறப்பு கடன் அட்டை, பாசன வசதி, குடிநீர் வசதி, 4 மடங்கு பணம் பட்டுவாடா, நீர்த்தேக்கத்துக்கு அடுத்துள்ள விவசாய நிலங்களுக்கு சென்று வர பாதை வசதி ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை கலெக்டரும், பொதுப்பணித்துறையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காலதாமதம் செய்தால் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும், என்றனர்.

மேலும் கொட்டரை கிராம விவசாயிகள் கூறுகையில், மருதையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடை செய்ய வேண்டும். கொட்டரை நீர்த்தேக்கத்தில் மதகு, பாலம் ஆகியவற்றில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். நீர்த்தேக்கத்தில் இருந்து கிளை வாய்க்கால் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். நீர்த்தேக்கத்தை சுற்றுலா தளமாக அமைக்க வேண்டும், என்றனர். மேலும் அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து கலெக்டரிடம் மனு அளிக்க அவர்கள் அனைவரும் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்