11 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத புதிய பஸ் நிலையம்

11 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத புதிய பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-16 22:04 GMT

உடையார்பாளையம்:

புதிய பஸ் நிலையம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கடந்த 2008-09-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையம் கடந்த 2.9.2011 அன்று திறக்கப்பட்டு 1 மாத காலம் மட்டுமே செயல்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் புதிய பஸ் நிலையம் பயன்படுத்தப்படாமல், மீண்டும் பழைய பஸ் நிலையமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடையார்பாளையம் பேரூராட்சி என்பதால் சார் பதிவாளர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அதிக வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூர், திருச்சி செல்லும் புறநகர் பஸ்கள் உடையார்பாளையம் நகருக்குள் வரும்போது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் சரியான நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

கோரிக்கை

மேலும் புதிய பஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஒரு சில பெட்டிக்கடைகள் மற்றும் உணவகம் மட்டுமே செயல்படுகிறது. இந்த கட்டிடம் மதுப்பிரியர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக மாறியுள்ளது. மது பாட்டில்களையும், தண்ணீர் பாட்டில்களையும் அங்கு விட்டுச்செல்லும் மதுப்பிரியர்கள், சாதி வெறியை தூண்டும் வகையிலும், ஆபாச வார்த்தைகளையும் கட்டிட சுவரில் எழுதியுள்ளனர்.

இதனால் அந்த வழியாக பெண்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சுமார் 11 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அந்த பஸ் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்