ஆம்னி பஸ் நிறுவன காவலாளி குத்திக்கொலை
மதுரை மேலக்கால் அருகே தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்தின் காவலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். பேட்டரி திருடர்களுக்கு இதில் தொடர்பு இருக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
மதுரை
மதுரை மேலக்கால் அருகே தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்தின் காவலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். பேட்டரி திருடர்களுக்கு இதில் தொடர்பு இருக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவலாளி கொலை
மதுரை கோச்சடை மேலக்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் நிறுத்தும் இடம் உள்ளது. நேற்று காலை அந்த இடத்திற்கு வந்தவர்கள் காவலாளி கத்திகுத்து காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு காவலாளி கழுத்து மற்றும் முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் காவலாளி நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் வாடிப்பட்டியை அடுத்த இரும்பாடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது 62) என்பதும், அவரது மனைவி இறந்து விட்டதாலும், மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருவதால் அவர் அங்கேயே கடந்த 4 ஆண்டுகளாக தங்கி வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
மோப்ப நாய்
இதைதொடர்ந்து மதுரை போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை, திடீர்நகர் போலீஸ் உதவி கமிஷனர் பழனிகுமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாயும் அங்கிருந்து சிறிதுதூரம் ஓடி தெருமுடியும் வரை சென்று நின்று விட்டது.
எனவே காவலாளியை யார் கொலை செய்தது, எதற்காக அவரை கொலை செய்தனர், முன்விரோதம் ஏதும் காரணமாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் மேலக்கால் பகுதியில் தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களின் குடோன்கள் அதிக அளவில் இயங்கி வருகிறது. அங்கு நிறுத்தப்படும் பஸ்களில் பேட்டரிகள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன.
பேட்டரி திருடர்கள்
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு கூட காவலாளி இறந்த கம்பெனிக்கு அருகில் உள்ள இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சில் இருந்து 4 பேட்டரிகள் திருட்டு போயிருந்தது. ஆதலால் பேட்டரி திருடர்களுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து போது நள்ளிரவு 3 பேர் அந்த கம்பெனிக்குள் சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காவலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.