குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பெண், வரதட்சணை கொடுமைப்படுத்தி கொல்லப்பட்டாரா?
சிவமொக்காவில், குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பெண், வரதட்சணை கொடுமைப் படுத்தி கொல்லப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்
சிவமொக்கா: சிவமொக்காவில், குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பெண், வரதட்சணை கொடுமைப் படுத்தி கொல்லப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தூக்குப்போட்டு தற்கொலை
சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா கும்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சிவமூர்த்தி(வயது 28). இவரது மனைவி ஜோதி(23). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜோதி கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுடன் மாமியார் ருத்ரம்மா, மாமனார் சேகரப்பா, சிவமூர்த்தியின் அண்ணன் ராமு, அவரது மனைவி ஷில்பா மற்றும் சிவமூர்த்தியின் தங்கை நீலம்மா ஆகியோரும் வசித்து வந்தனர்.
சிவமூர்த்தி - ஜோதி தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் மொத்தம் இவர்களுக்கு 3 குழந்தைகள். இதில் நேற்று முன்தினம் காலையில் இவர்களது மூத்த மகள் தனது பாட்டியுடன் வெளியே சென்றுவிட்டாள். ஜோதி வீட்டில் தனது இளைய மகள் சான்வி(3), மகன் குஷால்(1) ஆகியோருடன் இருந்தார். அப்போது திடீரென அவர் தனது மகன் மற்றும் மகளை தூக்கிட்டு கொன்று, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கும்சி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வரதட்சணை கொடுமை
இந்த நிலையில் ஜோதியின் பெற்றோர் கும்சி போலீசில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மகள் ஜோதியை வரதட்சணை கொடுமைப்படுத்தி அவரது கணவர் சிவமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம் என்றும், குழந்தைகளையும் அவர்களே கொன்றிருக்கலாம் என்றும் கூறியிருந்தனர். அதாவது கடந்த ஒரு மாதமாக ஜோதியிடம், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இருப்பினும் ஜோதி வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் அவரை அவரது கணவர் சிவமூர்த்தி, மாமியார் ருத்ரம்மா, மாமனார் சேகரப்பா, சிவமூர்த்தியின் அண்ணன் ராமு, அவரது மனைவி ஷில்பா மற்றும் சிவமூர்த்தியின் தங்கை நீலம்மா ஆகியோர் கொடுமைப்படுத்தி கொலை செய்திருக்கலாம். மேலும் குழந்தைகளையும் கொன்றிருக்கலாம். பின்னர் 3 பேரின் உடல்களையும் தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்று கூறியிருந்தார்.
பரபரப்பு
அந்த புகாரின்பேரில் போலீசார் ஜோதியின் கணவர் சிவமூர்த்தி, மாமியார் ருத்ரம்மா, மாமனார் சேகரப்பா, சிவமூர்த்தியின் அண்ணன் ராமு, அவரது மனைவி ஷில்பா மற்றும் சிவமூர்த்தியின் தங்கை நீலம்மா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.