காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு வாலிபர் பலி; உடலை மீட்க சென்ற நீச்சல் வீரரும் உயிரிழந்த சோகம்
ஹலகூர் அருகே முத்தத்தி பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு வாலிபர் பலியானார். அவரது உடலை மீட்க சென்ற நீச்சல் வீரரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது
ஹலகூர்: ஹலகூர் அருகே முத்தத்தி பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு வாலிபர் பலியானார். அவரது உடலை மீட்க சென்ற நீச்சல் வீரரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர்
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன்(வயது 20). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே உள்ள முத்தத்தி பகுதிக்கு வந்தார். அங்குள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் அப்பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தார். அதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.
உடலை மீட்க முயற்சி
இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து மிதுனை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் ஆற்றில் மூழ்கி பலியானார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து ஹலகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினருடன் வந்தனர். பின்னர் அவர்கள் மிதுனின் உடலை மீட்க முயன்றனர்.
மேலும் அவரது உடலை மீட்டு தரும்படி அப்பகுதியில் வசித்து வரும் நீச்சல் வீரரான முத்துராஜ்(40) என்பவரிடம் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் முத்துராஜ், காவிரி ஆற்றில் மிதுனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டார்.
பரிசலில் சென்று...
அப்போது அவரும் சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி பலியானார். இதையடுத்து அவரது உடலை பரிசலில் சென்று வனத்துறையினர் மீட்டனர்.
மிதுனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ஹலகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.