பேராவூரணியில் சேதமடைந்த சாலை சீரமைப்பு

தினத்தந்தி செய்தி எதிரொலியாக பேராவூரணியில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.

Update: 2022-05-16 19:52 GMT
பேராவூரணி:
தினத்தந்தி செய்தி எதிரொலியாக பேராவூரணியில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. 
குண்டும், குழியுமான சாலை
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் செல்வவிநாயகர்புரம் பூனைக்குத்திக்கொல்லையில் காட்டாற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான 4 சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்தது. மேலும், பாலத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சி அளித்தது. இதனால், இந்த பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறி கீழே விழுந்து வந்தனர்.
சீரமைப்பு 
ஆகவே, இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும், மேலும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், சேதமடைந்த சாலை குறித்து கடந்த 1-ந்தேதி `தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது.  இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். தற்போது சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய `தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்