புதுக்கோட்டை, கறம்பக்குடி, காரையூர், வடகாடு பகுதிகளில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை, கறம்பக்குடி, காரையூர், வடகாடு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடியில் மழை
கறம்பக்குடியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தபோதும் கறம்பக்குடி பகுதியில் மழை இல்லை. இதனால் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கறம்பக்குடி பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழை நீர்பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சிரமப்பட்டனர். இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயத்திற்கு உகந்த மழை என்பதால் விவசாயிகளும் சந்தோஷபட்டனர்.
காரையூர்
காரையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, சூரப்பட்டி, காரையூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் குளிர்ந்த காற்று வீசியது.
வடகாடு
வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் இப்பகுதியில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை ஒரு மணி நேரம் பெய்தது.