கறம்பக்குடி அருகே இஸ்லாமியர் இல்ல விழாவுக்கு மாமன் சீர் எடுத்து சென்று அசத்திய கிராம மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது
கறம்பக்குடி அருகே இஸ்லாமியர் இல்ல விழாவுக்கு இந்து சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள் மாமன் சீர் எடுத்து சென்ற சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாகி பாராட்டை குவித்து வருகிறது.;
கறம்பக்குடி:
சகோதர உறவுமுறை
தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் வசிக்கும் இந்துக்களும், முஸ்லிம்களும் மாமன் மச்சான் மற்றும் சகோதர உறவுமுறை வைத்து அழைத்து கொள்வது வழக்கம். ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது இந்துக்களுக்கு, முஸ்லிம்கள் பிரியாணி வழங்கி மகிழ்வதும், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முஸ்லிம்கள் இந்து சமூகத்தினருடன் சேர்ந்து கொண்டாடி வருவதும் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கறம்பக்குடி அருகே இஸ்லாமியர் இல்ல விழாவுக்கு இந்து சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள் மாமன் சீர் எடுத்து ஊர்வலமாக சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை குவித்து வருகிறது. இது குறித்த விபரம் வருமாறு:-
சீர் எடுத்து வந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது சித்திக். இவரது குழந்தைகளுக்கு நேற்று இஸ்லாமியர்களின் வழக்கப்படி பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தி கொண்டிருந்தனர்.
அப்போது மேளதாளங்கள் மற்றும் வாணவேடிக்கை முழங்க வெளியூர்களில் இருந்து விழாவுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் ஆச்சரியத்துடன் அப்பகுதியை பார்த்தனர். அங்கு மழையூர் கிராமத்தை சேர்ந்த இந்து சமூக மக்கள் தட்டு தாம்பூலங்களுடன் மாமன் சீர் எடுத்து வந்தனர். இதை கண்ட முகமது சித்திக் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து சீர் எடுத்து வந்தவர்களை கிராம வழக்கப்படி வரவேற்றனர். மாமன் மரியாதையும் வழங்கப்பட்டது.
பாராட்டுகள் குவிகிறது
மழையூர் கிராம மக்களின் மதம் கடந்த இந்த மனிதநேய பண்பை பார்த்து விழாவில் கலந்துகொண்டவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.