திருமண வரவேற்பு விழாவில் மணப்பெண்ணின் அண்ணன்களை தாக்கிய கும்பல்

கடலூரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் மணப்பெண்ணின் அண்ணன்களை தாக்கியதோடு நாற்காலிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பிய 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-05-16 19:00 GMT
கடலூர், 

கடலூர் அடுத்த செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது மகளுக்கு நேற்று முன்தினம் திருவந்திபுரம் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமண வரவேற்பு விழா, அன்று இரவு திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து நடந்தது. வரவேற்பு விழாவில் பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் பாட்டுக்கு நடனம் ஆடினர். அப்போது மணமகளின் உறவினர்களின் கை, எதிர்பாராதவிதமாக மணமகன் உறவினர்கள் மீது பட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த மணமகளின் அண்ணன்கள் அஸ்வின்ராஜ் (24), சரத்குமார் (22) ஆகியோர் தட்டிக்கேட்டனர்.

வலைவீச்சு

அப்போது 10 பேர் கொண்ட கும்பல், அவர்கள் இருவரையும் தாக்கினர். பின்னர் மண்டபத்தில் இருந்த நாற்காலிகளை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சந்திரசேகர், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வின்ராஜ், சரத்குமார் ஆகியோரை தாக்கி நாற்காலிகளை உடைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிப்பதுடன், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்