நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர ரெயிலை தினசரி இயக்க வேண்டும்-தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தல்

நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்

Update: 2022-05-16 18:56 GMT
விருதுநகர்,

நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிறப்பு ரெயில்

 நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 6029) இயக்கப்படுகிறது. 3 மாத காலத்திற்கு நவீனரக ஹெச்.எல்.பி. ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் இந்த ரெயில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.

முதல் ரெயில்

 நெல்லையில் இருந்து தென்காசி, பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் முதல் ரெயில் ஆகும். மேலும் ஊட்டி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் முதல் ரெயிலும் இதுதான்.
மேலும் நெல்லையில் இருந்து செல்லும் போது வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பழனிக்கு சென்றடைவதால் காலை 5.30 மணி அளவில் கோவிலில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு வசதியாக உள்ளது. கோவைக்கு காலை 6.30 மணிக்கு செல்லும ்நிலையில் வர்த்தகர்களுக்கு தங்களது வர்த்தக பணியை மேற்கொள்ளவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது. கோடை கால சீசனை யொட்டி ஊட்டி செல்வதற்கும் இந்த ரெயில் தென்மாவட்ட மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது உறுதி.
 மேலும் மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு ரெயில் (எண் 6030) இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை வந்தடைகிறது. 

கோரிக்கை 

எனவே தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் வசதியாக உள்ள இந்த சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே தென்மாவட்ட எம்.பி.க்கள் இதுகுறித்து தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி இந்த சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 மேலும் தற்போதைய நிலையில் பஸ் கட்டணத்தைவிட இந்த ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதால் இந்த ரெயிலில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 
மக்கள் சேவை தான் ரெயில்வே துறையின் முக்கிய நோக்கம் என்ற அடிப்படையில் ரெயில்வே நிர்வாகம் இந்த சிறப்பு ரெயிலை தொடர்ந்து தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்