மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் வாபஸ்
மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் பஸ்நிலையம் அருகே இயங்கி வரும் 2 அரசு மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பஸ் நிலைய பகுதியில் அருகருகே அரசு மதுபான 2 கடைகள் இருப்பதால் மதுபிரியர்கள் போதையில் அரைகுறை ஆடையுடன் நடமாடுகின்றனர். இதனால் வெளியூர் செல்ல பஸ் நிலையம் வரும் பெண்கள், பள்ளி குழந்தைகள் முகம்சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று அரசு மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போலீசார் பூட்டு போடும் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து சமாதான கூட்டம் நடத்தினர். இதில் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, இளையான்குடி தாசில்தார் மற்றும் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மதுபான கடைகளை வேறுஇடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.