புகழூர் காகித ஆலைக்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க கோரிக்கை
புகழூர் காகித ஆலைக்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்,
புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரனிடம் மைந்தர்கள் நல அமைப்பு செயலாளர் குமரானந்தம் மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில், புகழூர் காகித ஆலை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டது. அப்போது நிலம் வழங்கியவர்களுக்கு குறைந்த இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாக உத்திரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி நிலம் வழங்கிவர்கள் குறைந்த கல்வி தகுதி உடையவர்களாக இருந்ததால் குறைந்த ஊதியமுள்ள கிரேடு குறைவான பணி வழங்கப்பட்டது. இவ்வாறு பணி பெற்றவர்களில் தற்போது பலர் பணி ஓய்வு பெற்று விட்டனர், சிலர் இறந்து விட்டனர், தற்போது காகித ஆலையில் 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. அதில் நிலம் வழங்கிய எங்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கூறி நிறைவேற்றி தர மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.