குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் ஊராட்சி சார்பில் கோரிக்கை மனு

வடசேரி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீர்வு கூட்டத்தில் ஊராட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.;

Update: 2022-05-16 17:53 GMT
திருப்பத்தூர்

வடசேரி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீர்வு கூட்டத்தில் ஊராட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூ மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 287 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

பினனர் அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

குடிநீர் பிரச்சினை

மாதனூர் ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் அனிதா பாபு, துணைத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கோரிக்கை மனு அளித்தனர். அதில் எங்கள் ஊராட்சியில் 800 குடும்பங்கள் உள்ளது. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மூன்று ஆழ்துளை கிணறு இருந்தும் போதிய நீர் ஆதாரம் இல்லாததால் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் குடிநீர் வழங்க முடியவில்லை. குடிநீர் பிரச்சனையை தீர்க்க புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் சேரும் குப்பைகளை அள்ள மிதிவண்டி ஏதும் கிடையாது. எனவே குப்பை அள்ளுவதற்கு 2 வண்டி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சோமலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜெயஸ்ரீ அளித்துள்ள மனுவில் சோமலாபுரம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பணி செய்ய ரூ.18 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்கு பயன்படும் இடத்தில் பணி மேற்கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்