குளித்தலை,
திருப்பூர் மாவட்டம் புத்துகாட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் பிரபஞ்சன் (வயது 20). இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று குளித்தலை சின்னாண்டார் தெருவில் உள்ள தனது மாமா செல்லமுத்து (55) வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக தனது மாமாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணத்தட்டை பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், பிரபஞ்சன், செல்லமுத்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரபஞ்சன், செல்லமுத்து, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அஜித்குமார் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரபஞ்சன் மட்டும் மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதில் லேசான காயமடைந்த செல்லமுத்து, அஜித்குமார் ஆகிய 2 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.