4 நாட்களுக்கு முன்பு இறந்த விவசாயி உடல் தோண்டி எடுப்பு
வாணியம்பாடி அருகே 4 நாட்களுக்கு முன்பு இறந்த விவசாயி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின்பேரில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே 4 நாட்களுக்கு முன்பு இறந்த விவசாயி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின்பேரில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பிரிந்து வாழ்ந்தனர்
வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம், கருங்கல் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 93) விவசாயி. இவருக்கு மனைவி கனகா மற்றும் நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வாணியம்பாடி மற்றும் பெங்களூரு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த 1999-ம் ஆண்டு கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கனகா பிரிந்து சென்று பெங்களூருவில் தனது 3 மகன்கள், மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ரங்கநாதனின் கடைசி மகனான சண்முகத்திற்கு அதே பகுதியை சேர்ந்த வசந்தி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன் -மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து, சண்முகம் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அலசந்தாபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
கை கால்களில் காயத்துடன் சாவு
பின்னர் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் ரங்கநாதனும், வசந்தியும் வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்தில் பாகம் பிரித்து தருமாறு ரங்கநாதனிடம், வசந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுமார் 1.50 ஏக்கர் நிலத்தை கடந்த 2017-ம் ஆண்டு, தனது பெயருக்கு வசந்தி மாற்றியதாக கூறப்படுகிறது.
மீதம் உள்ள நிலத்தையும் கேட்டு வசந்தி அடிக்கடி ரங்கநாதனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 13-ந்் தேதி ரங்கநாதன் அரப்பாண்டகுப்பம் பகுதியில் உள்ள வசந்தியின் வீட்டில் உயிரிழந்ததாக உறவினர்கள் மற்றும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஊர் பொதுமக்கள் மூலம் வந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்று ரங்கநாதனின் மனைவி மற்றும் மகன்கள், மகள் ஆகியோர் தந்தையின் உடலை பார்த்த போது ரங்கநாதனின் கழுத்து, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்ததை பார்த்து வசந்தியிடம் கேட்டுள்ளனர்.
பிணம் தோண்டி எடுப்பு
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரங்கநாதனின் மனைவி கனகா மற்றும் பிள்ளைகளை வசந்தி மற்றும் அவரது உறவினர்களை அங்கிருந்து துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரங்கநாதனின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, மனைவி கனகா அம்பலூர் போலீஸ் நிலையம் மற்றும் வாணியம்பாடி தாசில்தாரிடம் புகார் செய்தார்.
அதில் தனது கணவரின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததாகவும், அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். புகாரின்பேரில் தாசில்தார் சம்பத் மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று, புதைக்கப்பட்ட ரங்கநாதனின் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர்.
கனகா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரங்கநாதன், சொத்துக்காக அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.