தர்மபுரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 480 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார்
தர்மபுரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 480 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார்
தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 480 மனுக்களை பெற்றார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். பஸ் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா மற்றும் சிட்டா, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 480 மனுக்கள் அளிக்கப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கலெக்டர் திவ்யதர்சினி ஆய்வு நடத்தினார். பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நிவாரண நிதி
தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்தபோது கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த கூடுதல் தூய்மை பணியாளர் சிவகுமார் என்பவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வர பெற்றது. இந்த நிவாரண நிதிக்கான காசோலையை அவருடைய மனைவியிடம் கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மரியா ரெஜினா, வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.