நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி போராட்டம்: மாவட்டத்தில் 50 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்-தொழிலாளர்கள் பாதிப்பு

நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி குமாரபாளையத்தில் 50 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-05-16 17:30 GMT
குமாரபாளையம்:
நூல் விலை உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்திக்கு அடுத்தப்படியாக ஜவுளி தொழில் சிறந்து விளங்குகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், வெண்ணந்தூர், எலச்சிபாளையம், ராசிபுரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளும், 5 ஆயிரம் விசைத்தறி கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இந்திய அளவில் பஞ்சு மற்றும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ரூ.430-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நூல் இந்த மாதம் ரூ.40 உயர்ந்து, ரூ.470-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.45 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 365 கிலோ கொண்ட கோண் மூட்டை தற்போது இரு மடங்கு உயர்ந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்பனையாகிறது.  இந்த விலை உயர்வு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
செயற்கை தட்டுப்பாடு
நூல் விலை உயர்வால் விசைத்தறி, கைத்தறி, பின்னலாடை, நூற்பாலை போன்ற ஜவுளி சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பருத்தி தட்டுப்பாடே இந்த விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
ஆனால் பருத்தியை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் விலை உயர்வை ஏற்படுத்தி வருவதாக ஜவுளி சார்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளுக்கு பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும், உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
50 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்
இந்தநிலையில் நூல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தக்கோரி நேற்று தமிழகம் முழுவதும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி, நாடா, பட்டு கயிறு உற்பத்தி கூடங்கள், ஜவுளி கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டன. மாவட்டத்தில் 50 ஆயிரம் விசைத்தறிகளில் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் விசைத்தறிகள், 2 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் இயக்காமல், மூடப்பட்டன. மேலும் குமாரபாளையம் நகரில் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் குமாரபாளையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பள்ளிபாளையத்தில் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. இதனால் விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
இதனிடையே குமாரபாளையத்தில் பள்ளிபாளயம் பிரிவு ரோட்டில், குமாரபாளையம் வட்டார ஜவுளி தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நூல் முகவரும், காங்கிரஸ் தலைவருமான ஜானகிராமன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் செல்வன், அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணி, கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் அறிவுமணி, பாலசுப்பிரமணி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் விசைத்தறி, கைத்தறி, நாடா உற்பத்தி, பட்டு கயிறு உற்பத்தி, ரெடிமேட் கார்மெண்ட்ஸ் போன்ற சிறு, குறு தொழில்களை பாதுகாக்க தமிழ்நாடு பருத்தி கழகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையம் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று ஜவுளி சார்ந்த தொழில் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்