வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
பெரியகுளம் தென்கரை கடைவீதியில் சாலை அமைக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை கடைவீதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களாகியும் கடைவீதி பகுதியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் கடைவீதியில் உள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வியாபாரிகள் ஊர்வலமாக பெரியகுளம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் ராஜவேலு, பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கடைவீதி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
பேவர் பிளாக் பதிக்காமல் சிமெண்டு தளம் அல்லது தார்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்டு, கடைவீதியில் நகராட்சி சார்பில் பணி விரைவாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார்.