பள்ளி வளாகத்தில் இந்து அமைப்பினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

பள்ளி வளாகத்தில் இந்து அமைப்பினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-05-16 17:22 GMT

குடகு:

திரிசூல முகாம்

  கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், விராஜ்பேட்டை டவுன் பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பு சார்பில் கடந்த ஒரு வாரமாக துப்பாக்கிச்சுடும் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமிற்கு திரிசூல முகாம் என பெயரிடப்பட்டுள்ளது. 

முகாமில் இந்து அமைப்புகளை சேர்ந்த தொண்டர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயிற்சி முகாமில் 120 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த முகாமில் கே.ஜி. போப்பையா எம்.எல்.ஏ., அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.சி. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  சட்ட விரோதமாக துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனத்தை வெளிபடுத்தியுள்ளனர்.
  துப்பாக்கி சூடு பயிற்சி குறித்து மடிகேரி நகரசபை கவுன்சிலர் அமீன் மொஹிசீன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கைவிட வேண்டும்

  இந்து அமைப்பு தொண்டர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பது சட்ட விரோதமானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் இந்த வகையான பயிற்சிகள் அளிக்க வேண்டிய அவசியம் என்ன?. இதை அரசு பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற பயிற்சிகள் மேற்கொள்வதை இந்து அமைப்புகள் கைவிட வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  இதுகுறித்து இந்து அமைப்பை சேர்ந்த சுரேஷ் என்பவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  கடந்த 20 ஆண்டுகளாக இந்து அமைப்பு தொண்டர்களுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சிகள் உள்பட பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் தற்காப்பிற்காக மட்டும் தான். மற்றவர்களை போல் தேசத்திற்கு துரோகம் செய்வதற்கு அல்ல. மேலும், இது சட்டவிரோதமாக நடக்கவில்லை. யாரும் இதுகுறித்து பேச தேவையில்லை.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்