மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவெண்காடு:
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழிலாளி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அல்லிவிளாகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 52). கூலித்தொழிலாளியான இவர், அருகில் உள்ள காத்திருப்பு கிராமத்தில் விழுப்புரம்- நாகப்பட்டினம் சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் அமைத்துள்ள அலுவலக வளாகத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை ரவி, தான் வேலை செய்து வந்த வளாகத்தில் கிடந்த குப்பைகளை சேகரித்துக்கொண்டு இருந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
அந்த வளாகத்தில் சுமார் 100 பேர் தங்கியுள்ள இரும்பு கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு ரவி குப்பைகளை சேகரித்துக்கொண்டு இருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ரவியின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் அங்கு திரண்டனர். சீர்காழி பன்னீர்செல்வம எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர்கள் அன்புமணி மணிமாறன், லட்சுமி முத்துக்குமரன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பலியான ரவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
இழப்பீடு கோரி சாலை மறியல்
சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன வளாகத்தில் ஆங்காங்கே பாதுகாப்பற்ற வகையில் மின்சார வயர்கள் தொங்கி கொண்டிருப்பதாக ரவியின் உறவினர்கள், கிராம மக்கள் குற்றம் சாட்டினர், எனவே மின்சாரம் தாக்கி இறந்த ரவியின் குடும்பத்திற்கு தனியார் நிறுவனம் முறையான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
அப்போது திடீரென ரவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இந்த மறியல் போராட்டம் குறித்த தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மின்சாரம் தாக்கி இறந்த ரவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.