மின்சாரம் தாக்கி கம்பத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்

டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலேயே வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கினார்.

Update: 2022-05-16 17:11 GMT
டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலேயே வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கினார்.
உதவி பணியாளர்
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). மின்வாரிய ஊழியர். அம்மாபேட்டை பி.கே.புதூரை சேர்ந்த முத்து என்பவரின் மகன் விஸ்வநாதன் (32). மின்வாரிய பணியாளர்கள் இவரை உதவிக்காக வைத்திருந்தார்கள். இந்த நிலையில் கொங்கர்பாளையம் அண்ணா வீதியில் உள்ள பாப்பாத்தி என்பவர் தனது வீட்டில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக டி.என்.பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து அதை சரிசெய்வதற்காக சக்திவேலும், விஸ்வநாதனும் அண்ணா வீதிக்கு சென்றனர். பின்னர் மின்மாற்றியை அணைத்துவிட்டு 2 பேரும் மின்துண்டிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் விஸ்வநாதன் மட்டு்்ம் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். சக்திவேல் கீழே நின்றிருந்தார்.
மின்சாரம் தாக்கியது
இந்த நிலையில் சக்திவேல் விஸ்வநாதனிடம், விரைவில் மின் இணைப்பை கொடுத்து விட்டு கீழே இறங்கு. நான் மின்மாற்றியை அணைத்துவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு விஸ்வநாதன், சிறிது நேரத்தில் இணைப்பு கொடுத்து விடுவதாகவும், அதன்பின்னர் மின் இணைப்பை வழங்கலாம் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் விஸ்வநாதன் கீேழ இறக்கி விட்டதாக நினைத்து சக்திவேல் அங்கிருந்து சிறிது தூரம் சென்று அங்குள்ள மின்மாற்றியை இயக்கிவிட்டார்.
ஆனால் விஸ்வநாதன் மின்கம்பத்தில் இருந்து இறங்காமல் அங்கேயே நின்று வேலை செய்து கொண்டிருந்துள்ளார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் மின்கம்பத்தில் இருந்த மின்கம்பிகள் மீது சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதை பார்த்து கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சக்திவேல் உடனே ஓடிச்சென்று மின்மாற்றியை அணைத்தார். இதுபற்றி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும் மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து, மின்கம்பிகளை துண்டித்து கயிறு மூலமாக விஸ்வநாதனின் உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக விஸ்வநாதனின் உடலை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---

மேலும் செய்திகள்