கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பக்தர்கள் கூட்டத்தில் தொலைந்த 18 பேர் மீட்பு

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தில் தொலைந்த 18 பேர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-16 17:03 GMT
வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தில் தொலைந்த 18 பேர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

சிரசு திருவிழா

குடியாத்தத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடந்தது. இந்த திருவிழாவுக்கு வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொரோனா நோய் தொற்று காரணமாக 2 ஆண்டுகலுக்கு பிறகு திருவிழா நடந்ததால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது கூட்ட நெரிசலில் பலர் தங்களது உடமைகளை தொலைத்தனர். சிலர் காணாமல் போயினர். அவர்களை காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். உடமைகளும் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

18 பேர் மீட்பு

கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் தங்களது பொருட்களை தொலைத்து விட்டதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வந்து புகார் தெரிவித்தனர்.

 அதன்அடிப்படையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் தவறவிட்ட 3 பர்ஸ், 3 செல்போன், 2 கைப்பை, 2 மூக்கு கண்ணாடி, 3 வாகன சாவி போன்றவை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், கூட்டத்தில் தொலைந்துபோன முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 18 பேர் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டுகள். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்