கூட்டுறவு சங்கத்தை குடும்ப அட்டைதாரர்கள் முற்றுகை
கடலூர் அருகே ரேஷன் கடையில் முறையாக பொருட்கள் வழங்காததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை குடும்ப அட்டைதாரர்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர்
கடலூர் துறைமுகம் அருகே உள்ள அக்கரைகோரி கிராமத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மூலமாக பயனடைந்து வரும் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த சில மாதங்களாக ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இதுபற்றி அந்த பகுதி மக்கள், கடை உரிமையாளர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த 19-ந்தேதி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
ஆனால், அதன் பின்னரும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வசந்தராயன்பாளையம் கூட்டுறவு சங்கத்துக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்கள் பகுதியில் ரேஷன் கடைக்கு தேவையான பொருட்களை ஏன் அனுப்பவில்லை?, ஏன் கடையை அனைத்து நாட்களிலும் திறக்கவில்லை? மற்றும் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் முறையாக பொருட்கள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதை பார்த்த அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்ததன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.