சாட்சி அளித்த ஜெயில் காவலரிடம் குறுக்கு விசாரணை செய்த முருகன்
ஜெயில் விதியை மீறி வெளிநாட்டிற்கு வீடியோகாலில் பேசிய வழக்கில் சாட்சி அளித்த ஜெயில் காவலரிடம் முருகன் குறுக்கு விசாரணை செய்தார்.
வேலூர்
ஜெயில் விதியை மீறி வெளிநாட்டிற்கு வீடியோகாலில் பேசிய வழக்கில் சாட்சி அளித்த ஜெயில் காவலரிடம் முருகன் குறுக்கு விசாரணை செய்தார்.
விதியை மீறி வீடியோகால்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் அவர் தன்னை விடுவிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். மேலும் பரோல் வழங்கும்படி முருகன் தற்போது தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜெயில் கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல்கள் நேரில் சந்திக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக வாட்ஸ்-அப் வீடியோகாலில் அவர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முருகன் வீடியோகாலில் வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் சிலரிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் விதியை மீறி மற்றொரு நபருக்கு வீடியோகால் (கான்பரன்ஸ் கால்) செய்ததாகவும், அதனை தடுத்த ஜெயில் காவலருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜெயில்காவலரிடம் முருகன் விசாரணை
இந்த வழக்கின் விசாரணை வேலூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (ஜே.எம். எண்-1) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி முருகன் ஜெயிலில் இருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜெயில் காவலர் தங்கமாயன் கோர்ட்டில் ஆஜராகி மாஜிஸ்திரேட்டு பத்மகுமாரி முன்பு சாட்சி அளித்தார். தொடர்ந்து சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் வாதாட முருகன் வக்கீலை நியமிக்காமல் அவரே ஆஜராகி வாதாடினார். தனக்கு எதிராக சாட்சி அளித்த சிறை காவலர் தங்கமாயனிடம், முருகன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணையில் வாட்ஸ்-அப் காலில் பேசியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை முருகன் எழுப்பினார்.
ஜெயில் காவலரின் சாட்சி மற்றும் முருகனின் குறுக்கு விசாரணையை கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு வழக்கின் விசாரணையை நாளை (அதாவது இன்று) ஒத்திவைத்தார். முருகனை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மற்றும் கூடுதல் சாட்சியும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு பத்மகுமாரி உத்தரவிட்டார்.
உடல்சோர்வுடன் காணப்பட்டார்
முருகன் 6 நாட்கள் பரோல் வழங்கக்கோரி ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதன்காரணமாக கோர்ட்டிற்கு வந்த அவர் மிகவும் உடல்சோர்வுடன் காணப்பட்டார்.
முருகனை கைதாங்கலாக போலீசார் அழைத்து வந்தனர். முருகன் கோர்ட்டில் ஆஜரானதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.