திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துசென்றனர்.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவிழாவுக்கு வந்த பக்தர்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம கும்பல் பெண்களிடம் செயின் பறித்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குடியாத்தத்தை அடுத்த லட்சுமணாபுரம் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டியிடம் 6½ பவுன் நகை, ஆரணியை சேர்ந்த 60 வயது மூதாட்டியிடம் 1¾ பவுன் நகை, தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் 1¾ பவுன் நகை என மொத்தம் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து நகையை பறிகொடுத்தவர்கள் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப்போன நகைகளின் மதிப்பு ரூ. 2½ லட்சம் ஆகும்.