கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது

கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

Update: 2022-05-16 16:28 GMT

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 400-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், அந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமூலம் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அறக்கட்டளையின் கீழ் பாதுகாவலர் நியமன சான்றிதழை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்