மண்எண்ணெய், கைக்குழந்தையுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-16 15:59 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணெய், குழந்தை யுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருமணம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் விட்டில்பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் உமாமகேசுவரி. இவருக்கும் கீழக்கரை வங்கியில் பணிபுரியும் ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு வயதில் குழந்தை உள்ளது. 
இந்தநிலையில் ரமேஷ் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டாராம். தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பிடிக்க வில்லை என்று கூறியும் ரூ.5 லட்சம் கூடுதலாக வரதட்சணை வாங்கி வந்தால் வாழ்வதாக கூறி பிரிந்து சென்று விட்டா ராம். இந்தநிலையில் உமாமகேசுவரி தனக்கு திருமணத்தின் போது போட்ட 15 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம், சீர்வரிசை பொருட்களை திருப்பி கேட்டபோது தரமறுத்து விட்டாராம். 
புகார்
இதுகுறித்து உமாமகேசுவரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து உமாமகேசுவரியின் புகாரின் அடிப்படையில் கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
இந்தநிலையில் தனக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்க வில்லை என்றும் தனது பொருட்கள் மற்றும் நகைகளை திருப்பி தரவில்லை என்றும் கூறி உமாமகேசுவரி  நேற்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். 
அவரை பரிசோதித்த போலீசார் அதனை பறிமுதல் செய்து எச்சரித்தனர். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கை சந்தித்து பொருட்கள் மற்றும் நகை, பணத்தினை பெற்றுத்தந்தால் நான் ஏதாவது வேலை செய்து குழந்தையை காப்பாற்றி பிழைத்து கொள்வேன். 
உறுதி
அதற்கு காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இனி வாழ்வதை தவிர வேறு வழியில்லை தற்கொலை செய்துகொள்வது தான் ஒரே வழி என்றார். 
அவருக்கு அறிவுரை கூறிய போலீஸ் சூப்பிரண்டு போலீசார் நேரில் வந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதி கூறினார். இதனை தொடர்ந்து உமாமகேசுவரி அங்கிருந்து சமாதானமாகி சென்றார்.

மேலும் செய்திகள்