தம்பியை கத்தியால் குத்தி படுகொலை செய்த வாலிபர்
தம்பியை கத்தியால் குத்தி படுகொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெங்களூரு:
பெலகாவி மாவட்டம் கோகாக் டவுன் பகுதியில் வசித்து வந்தவர் ரம்ஜான் தேசாய்(வயது 26). இவரது தம்பி முனாப் தேசாய்(24). நேற்று இரவு இவர்களது பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் இருவரையும் ரம்ஜான் தேசாய் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ரம்ஜான் தேசாயை அவரது தம்பி முனாப் தடுக்க முயன்றார். இதனால் கோபம் கொண்ட ரம்ஜான் தேசாய், தனது தம்பியை கண்டித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரம்ஜான் தேசாய், தனது தம்பி முனாப்பை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முனாப்பை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கோகாக் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.