கார்- சரக்கு வேன் மோதல்; விவசாயி பலி
சிவகிரி அருகே கார்- சரக்கு வேன் மோதியதில் விவசாயி பலியானாா்.;
சிவகிரி அருகே உள்ள காகம் என்ற ஊரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). விவசாயி. இவர் சிவகிரி அருகே விளக்கேத்தியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். விளக்கேத்தியை அடுத்த பேயாங்காட்டு வலசு அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வேனும், பழனிச்சாமியின் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காருக்குள் இருந்த பழனிச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் கார் மற்றும் சரக்கு வேனின் முன்புறம் சேதம் அடைந்தது.
விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று காயம் அடைந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பழனிச்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் சிவகிரி போலீசார் விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.