பொதுப்பணித்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-16 15:42 GMT
கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
வாய்க்காலை சுத்தம் செய்யும் பணி
கீழ்பவானி வாய்க்காலில் கான்கீரிட் தளம் அமைப்பதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும், மற்றொரு தரப்பு விவசாயிகள் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இது தொடர்பாக விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் மதகு பழுது பார்த்தல், கரைகள் தூய்மை படுத்துதல், தூர்வாருதல் பணி நடைபெற்று வருகிறது. 
முற்றுகை
அதன் அடிப்படையில் கோபியை அடுத்த செம்மாண்டாம்பாளையம் பகுதி வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் புதிதாக படித்துறை அமைத்தல், மதகுகள் சரிசெய்தல், மற்றும் கரை பகுதிகளில் புதர் நிறைந்த இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் செய்து வந்தனர். 
இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கு நடைபெற்று வந்த வாய்க்கால் சுத்தம் செய்யும் பணியை நிறுத்தக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். 
பரபரப்பு
இதையடுத்து விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘கீழ்பவானி வாய்க்கால் கரைகளின் இரு புறங்களிலும் உள்ள புதர் நிறைந்த இடங்களில் தூய்மை பணி, பழுதடைந்த மதகுகள் சரி செய்தல் பணி மட்டுமே நடைபெற்று வருவதாக,’ தெரிவித்தனர். 
இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்